Pages

  • RSS

16 January, 2012

’டை’பொங்கல்.

இந்த வருடமும் வழக்கம்போல சூரியன் ஆன்லைனில் வரவில்லை. பகலில் சிறிது வெளிச்சமாக இருந்தது. வழக்கமாக எடுக்கும் விடுப்பும் இல்லாமல் இம்முறை ஞாயிறில் ஞாயிறுக்கான விழா. விடுப்பில் இருந்து நான் காலையில் பொங்கினாலும் மாம்ஸ் வேலையாலும், பிள்ளைகள் பள்ளியாலும் வந்து மாலையில் படைக்கும் மாலைப் பொங்கலே இதுவரை இருந்திருக்கிறது. இம்முறை பகற்பொங்கல்.

வழக்கம்போல கடைசி நேரத்தில்தான் காய்ந்த திராட்சையும், தேங்காய் எண்ணெயும் இல்லையென்பதை கண்டுபிடித்தேன். மாம்சும் பொங்காமல் கடைக்குப் போய் வரவும் பால் பொங்கவும் சரியாக இருந்தது.

032 034 036 037

கூடவே வடையும், கொண்டைக்கடலையும் அவித்துப் படைத்து  பகற்பொங்கலை இனிதே முடித்தோம்.

043 046

நான் ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். (ஞாயிற்றுக்கிழமையில் ஆறு மணி என்பது வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதால் இங்கே பதிந்து வைத்துக்கொள்கிறேன்) மாம்ஸ் எழுந்து வந்து ‘உனக்கு நாளைக்கு தான் விஷ் பண்ணோணும். இருந்தாலும் அட்வான்ஸ் வாழ்த்துகள்’ என்றார். கிறிஸ்தியான் நேற்று இரவு இங்கே தங்கியதால் ஒன்பது மணிக்கு சது எழுந்து தயாராகிக் கீழிருந்து குரல் கொடுத்தார்.

‘அம்மா.. கிறிஸ்தியான் வீட்ட போட்டு வாறேன்’

’சாப்ட்டு போங்கோ தம்பி`

’இப்ப பசிக்கேல்ல. போட்டு வாறேன். என்னம்மா மணக்குது??’

‘இண்டைக்கு தைப்பொங்கல் எல்லே.. அதான் அம்மா புக்கை(பொங்கல்) செய்யிறன்’

‘அஷ்(உவ்வே)’ என்றுவிட்டுப் போனவரை படைக்கும் முன் கால் பண்ணி கூப்பிட்டுக் குளிக்க வைத்தேன்.

041 அம்முவை குளிக்கச் சொன்னபோது கட்டாயம் இவளவு சீக்கிரம் குளிக்க வேண்டுமாவென்று சிணுங்கியபடியே போகிற போக்கில் வடை மாவில் இரண்டு வரி வைத்துவிட்டுப் போய்க் குளித்தார். அவருக்கு அரைத்த உளுந்து பிடிக்கும். வடை பிடிக்காது.

 

காரை கழுவிவிட்டு வந்த மாம்ஸ் படைக்கும்போது கையை கட்டியபடி பின்னாடியே நின்றார். முறைத்த எனக்கு ’கார் கழுவினா நான் குளிச்சது போல தானே.. படைக்கிற வேலைய பாப்பியா.. பசிக்குதில்ல’ என்றார். தேவாரம் சொல்லிய குறையில் சது செருப்போடு நிற்பது மாம்சால் கவனிக்கப்பட்டது. ’அம்மா ரூமுக்கு வெளியில கழற்றி இருந்தா. எனக்கு குளிர்ந்துது. அதுதான் போட்டனான்’ என்றார்.

இவ்வாறு படையல் முடித்து சாப்பிட வந்தால் அம்முவுக்கு நான் ஊட்டிவிட்ட ஒரு வாய் பொங்கல். சது ஒரு நான்கைந்து வாய் பொங்கல். வடை வேண்டுமென்றார். மிளகாயின் காரம் தாங்காமல் விட்டுவிட்டார். வந்த நண்பர்களும் மாம்சும் நன்றாக இருப்பதாகச் சொல்லி சான்றிதழ் வழங்கி வயிறார உண்டார்கள். மாம்சின் பழைய முதலாளிக்கும், ஒரு நண்பனுக்கும் பொட்டலம் அனுப்பிவிட்டு நானும் உண்டேன்.

பின்னர் ஜெயாண்ணா, மாமி, அண்ணா, அப்பா, ரஜியோடு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். ஜெயாண்ணாவின் பிள்ளைகள் மாட்டுப் பொங்கலுக்கும் சேர்த்தே வாழ்த்தினார்கள். விதுர்ஜன் ஏன் மாட்டுப் பொங்கல் பொங்கவில்லை என்று கேட்டாராம். எங்களிடம் மாடில்லை என்றதும் ஒன்றை வாங்கி பொங்கல் முடிய விற்கலாமே என்றாராம்.

அண்ணா படங்களில் புதுச்சட்டை போட்டிருந்தார். நான் கேட்பதுக்குள்ளாகவே

‘இந்த வருஷம் எனக்கு ‘டை`பொங்கலடி’ என்றார். அக்காச்சியும் அம்மாவும் கொடுத்துவிட்ட இரண்டு சட்டைகளிலும் டை இருந்தது. இருவருக்கும் குறையில்லாமல் இரண்டு சட்டைகளையும், கூடவே அந்த டையோட ஃபோட்டோ இல்லையா என்று கேட்காமல் அதையும் சேர்த்தே போட்டிருந்தார்.

ரஜி வீட்டில் அனைவரும் தூங்கிப் போயிருக்க ரஜி மட்டும் தூக்கக் குரலில் பேசினான். அம்மா பொங்கல் செய்ய தயாரானபோது ஸ்கைப்பில் வந்தார். பொங்கல் பாதியில் அத்தை ஸ்கைப்பில் வந்தார். அக்காச்சியோடு இனிமேல்தான் பேசவேண்டும்.

ஸ்கைப்பில் ’இண்டைக்குத்தானடி நீ ஒரு நல்ல சட்டை(ஃப்ராக்) போட்டிருக்கிறாய்’ என்றார் அண்ணா. அது அம்மா 2004இல் ஊருக்குப் போனபோது தைத்துத் தந்தது. அன்றிலிருந்து பொங்கலுக்கு அதுதான். என்னவோ இன்னமும் பண்டிகைகளின்போது ஊர் பற்றிய ஏக்கம் விட்டுப் போவதாய் இல்லை. அதற்கு ஈடாக இந்த வழக்கம். ஒன்றை மறக்க இன்னொன்று. சரிதானே நான் சொல்வது??

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

5 நல்லவங்க படிச்சாங்களாம்:

கோபிநாத் said...

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;-))

\\ கையை கட்டியபடி பின்னாடியே நின்றார்.\\

அய்யோ பாவம்..லீவு நாளு அதுவும் பொங்கல் அன்னிக்கு கூட இப்படியா ;-))))

vinu said...

vaalthukkaal

சுசி said...

பொங்கலால பொங்காமப் போறேன் கோப்ஸ் :)

@@

உங்களுக்கும் வாழ்த்துகள் வினு.

கார்க்கிபவா said...

இந்த வருடமும் வழக்கம்போல சூரியன் ஆன்லைனில் வரவில்லை

:))

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு